ஓர் அன்பு நம்மை நிராகரிக்கும்போதும்
அன்பின் நுழைவாயில் அடைப்படும்போதும்
செய்வதற்கு ஒன்றும் இல்லை.
அன்பை வேண்டி பெறுதல் பிச்சையாகிவிடும்
தளர்ந்தமுகம் கழிவிரக்கத்தை ஏற்படுத்தலாம்
சகஜமாக சிரிப்பது அன்பை பரிகசித்ததாகிவிடலாம்
நமது அன்பின்மீது நமக்கே சந்தேகம் ஏற்படலாம்
நிராகரித்து நகரும் அன்பை பின் தொடரவும் இயலாது
அது பாதைகளற்ற பெருவெளியில் பயணிக்கக்கூடும்
நிராகரித்து நகரும் அன்பை
வேரொரு சந்தர்பத்தில் எதிர்கொள்ளுதல்
பயங்கரமானது
அப்போதைய தன்மை அறிந்து
முகத்தை மாற்றும்திறன் கைவர வேண்டும்
நகர்ந்த அன்பு ஏற்படுத்திய வெற்றிடத்தை
கவிதை கொண்டு நிரப்ப இயலாது
அது மேலும் பிரிவின் துக்கத்தையும்
அயற்சியையும் ஏற்படுத்தும்
நிராகரிப்பு ஏற்படுத்தும் வெறுமையில்
வெறுமை இருப்பதில்லை
அது அன்பை தேடவும் சேகரிக்கவும்
சில சந்தர்பங்களைத்தருகிறது
கால்களை நகர வைக்கிறது.